கமுதி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை
3/23/2016 2:56:56 PM
கமுதி: கமுதி அருகே இன்று அதிகாலை ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற 3 பெண்களுக்கும் சரமாரி வெட்டு விழுந்தது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பொட்டக்குடியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(27). ஆட்டோ ஓட்டி வருகிறார். கமுதி அருகே அபிராமத்தில் உள்ள பஞ்சு மில்லில் நேற்று இரவு வேலை முடித்த 3 பெண்களை ஏற்றி கொண்டு இன்று காலை தரைக்குடி கிராமத்திற்கு விக்னேஸ்வரன் வந்தார். தரைக்குடி கிராமம் அருகே வந்தபோது, ஆம்னி வேனில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது. காரிலிருந்து அரிவாள், கத்தியுடன் இறங்கிய கும்பல் டிரைவர் விக்னேஸ்வரனை சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை தடுக்க முயன்ற தரைக்குடியை சேர்ந்த அனீஸ் பாத்திமா, விஜயசாந்தி, விக்னேஷ்வரி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த 3 பேரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அபிராமம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.