பிரஸ்செல்சில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு
3/23/2016 2:54:53 PM
மீனம்பாக்கம்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்சில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து உயிரிழப்பு ஏற்பட்டது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகமும், இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் இணைந்து, நமது நாட்டில் அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் விமான நிலைய உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. இதில் விமான பாதுகாப்பு, மத்திய தொழில் பாதுகாப்பு, விமான நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், மத்திய, மாநில உளவு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு நேற்றிரவு 7 மணி முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர் வருகைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமாக யாராவது நடமாடினால் தீவிர விசாரணை செய்யவும், உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகள் உடமைகளை தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வியாழக்கிழமை காலை வரை இந்த பாதுகாப்பு அமலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.