கூட்டணி ஆட்சி மந்திரிசபையில் இடம் தேமுதிக உறுதி என வைகோ தகவல்
3/23/2016 2:52:53 PM
சென்னை: கூட்டணி ஆட்சி அமைத்து மந்திரிசபையிலும் இடம் தருவதாக விஜயகாந்த் உறுதியளித்துள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இணைந்தது குறித்து மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியதாவது:மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கிங் மேக்கர்களும் சேர்ந்து விஜயகாந்தை கிங் ஆக உருவாக்கி ஆட்சி பீடத்தில் முதல்வராக அமர வைப்போம். இனி இந்த கூட்டணி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படும். போட்டி இனி அதிமுகவுக்கும் விஜயகாந்த் அணிக்கும் தான். எதையும் கூர்ந்து யோசித்து, திட்டமிட்டு செயல்படுபவர் விஜயகாந்த். மக்கள் நலக்கூட்டணிக்கு மட்டுமல்ல தேமுதிக இணைந்துள்ள கூட்டணிக்கும் வைகோ தான் ஒருங்கிணைப்பாளர் என விஜயகாந்த் பெருந்தன்மையாக கூறியுள்ளார்.
இந்த கூட்டணி வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பொறுப்பேற்கும் போது இது கூட்டணி அரசு என்று கூறலாமா என்று விஜயகாந்திடம் கேட்டேன். தாராளமாக கூட்டணி அரசு என்று கூறுங்கள் என்று தெரிவித்தார். யார், யாருக்கு எந்த இலாகா வேண்டும் என்று கூறுங்கள் என்றும் கூறிவிட்டார். எல்லோருக்கும் முதலமைச்சர் வேட்பாளர் பதில் சொல்ல வேண்டியதில்லை. பாண்டவர்களில் விஜயகாந்த் தர்மர். நாங்கள் தர்மரை நெருங்க விடமாட்டோம். அவருக்கு அர்ஜுனனும், பீமனும் இரு பக்கமும் இருக்கிறோம்.எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். எங்களை தாண்டி தான் அவரிடம் போக வேண்டும். அதற்கு முன் நகுலனும், சகாதேவனும் இருக்கின்றனர். இன்றிலிருந்து தேர்தல் பணி தொடங்க இருக்கிறோம். வரும் 26ம் தேதி மக்கள் நல கூட்டணியின் வழக்கறிஞர் அணிமாநாட்டில் தேமுதிக பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். மேலும், 28 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் தென்மாவட் பிரச்சாரத்தில் கோவில்பட்டியில் சுதீஷ், மற்ற இடங்களில் சந்திரகுமார் கலந்து கொள்கின்றனர்.
அதேபோல, பிரேமலதா சுற்றுப்பயணத்தில், மக்கள் நலக்கூட்டணி கட்சியினர் பங்கேற்பார்கள். மொத்தத்தில், இனி தேமுதிக நிகழ்ச்சிகளில் மக்கள் நலக்கூட்டணி கட்சியினர் பங்கேற்பார்கள். மக்கள் நலக்கூட்டணி நிகழ்ச்சிகளில் தேமுதிகவினர் பங்கேற்பார்கள். மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைய காரணமாக இருந்த பிரேமலதா மற்றும் சுதீஷுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த கூட்டணி, மக்கள் எதிர்பார்த்த கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள்): யார் பக்கம் விஜயகாந்த் செல்வார் என 3 மாத காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. மக்கள் பக்கம் தான் நிற்பார் விஜயகாந்த் என்ற அடிப்படையில், மக்கள் நலக்கூட்டணியோடு தொகுதி உடன்பாடு வைத்துள்ளார். இது யாரும் எதிர்பாராத ஒரு திருப்புமுனை. அதிமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.
அதற்காக எதையும் செய்வேன் என்று கூறினார். இப்போது பேசிக் கொண்டிருக்கிற போது, நாங்கள் நால்வரும் கிங் மேக்கராகி விட்டோம். உங்களை கிங் ஆக்க போகிறோம் என வைகோ கூறினார். விஜயகாந்த் அணியில் மக்கள் நலக்கட்டணி தொகுதி உடன்பாடு வைத்துள்ளது. தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும் என சரியான முடிவு எடுத்து மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: இன்று பகத்சிங் நினைவு தினம். அவர் எந்த நோக்கத்திற்காக உயிர் தியாகம் செய்தாரோ, எந்த நோக்கத்திற்காக தூக்கு கயிறை முத்தமிட்டாரோ அந்த நினைவு தினத்தில் வரலாற்று சிறப்பு மிக்க உடன்பாட்டை ஏற்படுத்தி கையெழுத்தாகி உள்ளது. இந்த கூட்டணி தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். 5 கட்சி செயல்வீரர்களும் சேர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.
முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): மகாபாரத போரில் பஞ்ச பாண்டவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். பஞ்ச பாண்டவர்களில் மூத்தவராக தர்மன் இருந்தார். இங்கே விஜயகாந்த் தான் தர்மன். மகாபாரத யுத்தத்தில் பலரும் பங்கு பெற்றாலும் கூட அம்பின் நுனியும், கிளியின் கழுத்து மட்டும் தெரிந்து கொண்ட ஒருவர் இருந்தார். அவர் தான் அர்சுணன். அந்த அர்சுணன் தான் தர்மனுக்கு அடுத்த இடத்தில் உள்ள வைகோ.துரியோதனனின் தொடையை பிளந்தவர் பீமன். அவர் தான் திருமாவளவன். நகுலனாக ஜி.ராமகிருஷ்ணனையும், சகாதேவனாக முத்தரசனையும் எடுத்துக் கொள்ளுங்கள். போர்க்களம் தயாராகிவிட்டது. சூடாகத்தான் இருக்கும். மகாபாரத போரில் பஞ்ச பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.