மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி
3/23/2016 2:52:05 PM
சென்னை: மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்தாது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணி தயாராகி வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலைவர் காதர் மொய்தீன், நிர்வாகிகள் அபுபக்கர், ஷாஜகான், அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியது:முஸ்லிம் லீக் சார்பில், 15 தொகுதிகளுக்கான பட்டியலை தந்து, 8 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கிறது. ஓரிரு நாளில் திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசி, தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.நீங்கள் கேட்ட தொகுதிகளை மற்ற முஸ்லிம் லீக் அமைப்புகள் கேட்கும் நிலையில் என்ன செய்வீர்கள்?
அதுபற்றி திமுக முடிவு செய்யும்.தேமுதிக மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருப்பதால் உங்கள் அணிக்கு பாதிப்பு வருமா?தமிழகத்தை பொறுத்தவரையில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி. அதிமுகவை வீழ்த்தும் ஆற்றல் திமுகவுக்குதான் இருக்கிறது. எனவே எங்கள் கூட்டணி வெற்றி பெறும். சைபர், சைபர் சேர்ந்தால் சைபர்தான்.பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியது:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. அவர்கள் தந்த கோரிக்கையை பரிசீலிப்போம். திமுக தலைவர் கருணாநிதியுடன் கலந்து பேசி தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.
மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக சேர்ந்தது திமுக அணிக்கு பாதகம் ஏற்படுத்துமா?எங்களுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாது. எங்கள் பணி தொடரும்.காங்கிரசுடன் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்?ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். குலாம்நபி ஆசாத், இதற்காக வர இருக்கிறார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.