மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு
3/23/2016 2:51:08 PM
சென்னை: மக்கள் நலக் கூட்டணி உடன் இணைந்தது பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:நிறைய பேர் பெயரைச் சொல்ல வேண்டும். என்னுடைய கட்சித் தொண்டர்களும் இருக்கிறார்கள். அதனால யாரும் தப்பா எடுத்துக்கொள்ளக் கூடாது. இங்கு எல்லோரும் இருக்கிறார்கள், மக்கள் நலக்கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் வைகோ, சகோதரர் திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் இருக்கிறார். அதனால நான் எப்படி பேச வேண்டும் என்று சொல்கிறேன். பேரன்புகொண்ட சகோதர சகோதரிகளே, என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே. அன்பு கொண்ட தொண்டர்களே என்று சொல்ல முடியாது. ஏன்னா அவர்கள் இப்போது இங்கே இல்லை. இருந்தாலும் சொல்ல வேண்டும். அதனால எல்லாருக்கும் வணக்கம். அப்படின்னுதான் நான் பேசுவேன். இந்த நேரத்தில் என்னை நான் மாற்றிக்கொள்கிறேன்.
ஏனென்றால் மக்கள் நலக் கூட்டணியில் நான் என்னை எப்போது ஐக்கியப்படுத்திக் கொண்டேனோ அப்போதிருந்தே என்னை மாற்றிக்கொள்கிறேன். அதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். முயற்சிக்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன். முழு மனதுடன் முயற்சி செய்கிறேன். யாராவது விட்டுப்போய்விட்டால் வருத்தப்படாதீர்கள் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து. யார் பேராவது விட்டுப்போய்விட்டால், குறிப்பிடவில்லை என்று வருத்தப்படவேண்டாம். உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதாவது இன்றைக்கு இவர்கள் இங்கே வந்தார்கள். நாலு பேரும் கிங் மேக்கர் என்றார்கள். நீங்கள் கிங்காக இருங்கள் என்றார்கள். இப்படித்தான் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறோம். வைகோ பேசும்போது கூட்டணி மந்திரி சபையா என்று கேட்டார், தாராளமாக சொல்லுங்க கூட்டணி மந்திரிசபைதான். நான் ஏற்கனவே திருமாவிடம் பேசும்போதும் கூட்டணி மந்திரி சபைதான் என்று சொல்லியிருக்கிறேன்.
இதைத்தான் நான் அன்றையிலிருந்து சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நீங்களும் தாராளமாக சொல்லுங்கள். எத்தனையோ பேர் சொல்றாங்க, நான் பணத்தாசைக்கு விலை போய்விட்டேன் என்று. சிலர் சொல்றாங்க இந்த பக்கம் விலை போயிட்டார் என்று. எந்த பக்கமும் விலை போகவில்லை. நான் மக்களுடன்தான் கூட்டணி. அன்புத் தெய்வங்களுடன்தான் கூட்டணி. தெய்வம் என்றால் மக்கள். இவர்களுடன் ஏன் கூட்டணி என்று கேட்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணி, மக்களுடன் கூட்டணி. மக்கள்தான் தெய்வம். அவர்களுக்கு தெய்வத்தைப் பிடிக்குமா, பிடிக்காதா என்று தெரியாது. எனக்கு தெய்வத்தைப் பிடிக்கும். நாலு பேரும் நாலு விதமான கொள்கையுடையவர்கள் என்று நினைத்து விடவேண்டாம்.
அந்த நாலு பேரும்தான் கிங் மேக்கர்கள், என்னை கிங் என்று சொன்னார்கள். எல்லாரும் என்னைவிட மூத்தவர்கள்தான். இருந்தாலும் என்னை ஏற்றுக்கொண்டார்கள். இங்கு வந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு சினிமாவில் கேட்டு கேட்டு பேசி பழக்கம். அதனால்தான் ஒருபக்கம் பார்த்து பேசமாட்டேன். பல பக்கம் பார்த்து பேசுவேன். இதைப் பார்த்து கத்துவாங்க. அவங்களுக்கு விஜயகாந்த் என்ன பேச்சை நிறுத்திவிட்டார் என்று நினைப்பார்கள். பேசிக்கொண்டே வேற பக்கம் பார்த்துக்கொண்டே பேசுவேன். நான் எழுதி வைச்சு பேச மாட்டேன். இதற்கே இப்படி கோபப்படுறாங்களே, எனது மனைவி கூறுவார் ‘ஒருவர் 5 வருஷம் பேசாமல் இருந்தார். அவரை எப்படி கிண்டல் பண்ணினார்கள். அவரேதான் இன்றைக்கு அந்தகட்சிக்கு போயிருக்கிறார். இப்போது என்னை சொல்கிறார். அதையேத்தான் என்னை சொல்கிறார்கள். ஐந்து வருஷம் பேசாமல் ஆட்சி புரிந்தவர் தலைமையிலான கட்சிக்குத்தான் அவர் போயிருக்கிறார் மக்களே.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.