11ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் வாலிபர் கைது
3/23/2016 2:10:08 PM
ஆவடி: திருமண ஆசை காட்டி 11ம் வகுப்பு மாணவியை கடத்தி கோயில் முன்பு திருமணம் செய்து, வாடகை வீட்டில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அரக்கோணம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தர்ராஜ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த அவரது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். சுமதியை கண்டித்ததோடு, அவரை ஆவடியில் உறவினர் வீட்டில் கடந்த வாரம் தங்க வைத்தனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி திடீரென சுமதி மாயமானார். இதுகுறித்து ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், சுந்தர்ராஜ்தான், சுமதியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து சுந்தர்ராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சுமதியை ஆவடி பஸ் நிலையத்தில் விட்டு விட்டு, அரக்கோணம் செல்ல ஆவடி ரயில் நிலையத்தில் சுந்தர்ராஜ் காத்திருந்தார். இதற்கிடையில், சுமதியும் தனது வீட்டுக்கு சென்றார். உடனே சுமதியை ஆவடி காவல் நிலையத்துக்கு அவரது பெற்றோர் அழைத்து வந்தனர். பின்னர் சுமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திருமண ஆசைகாட்டி சுமதியை சுந்தர்ராஜ் கடத்தி சென்றதும், காஞ்சிபுரத்தில் ஒரு கோயில் முன்பு சுமதிக்கு தாலி கட்டி ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து சுந்தர்ராஜை கைது செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சுமதியை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.