வாக்காளர்களுக்கு வினியோகமா? 45 கிலோ வெள்ளி கொலுசுகள் சிக்கின
3/23/2016 2:08:21 PM
திருச்சி: ஸ்ரீ ரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் செக்போஸ்டில் தனி தாசில்தார் பவானி தலைமையிலான பறக்கும்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சேலத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த காரை சோதனையிட்டனர். காரில் ரூ.13.65 லட்சம் மதிப்பிலான, 45.5 கிலோ எைட கொண்ட வெள்ளி கொலுசுகள் இருந்தன. காரில் வந்த சேலத்தை சேர்ந்த ராஜன் என்பவரிடம் விசாரித்தபோது, திருச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு ஆர்டரின் பேரில் கொலுசுகளை செய்து, கொண்டு வந்ததாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, ரங்கம் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சுமதியிடம் ஒப்படைத்தனர். அவர் கொலுசுகளை கருவூலத்தில் ஒப்படைத்தார்.உண்மையில் நகைக்கடைக்கு கொண்டு வரப்பட்டதா, அல்லது வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.