சிக்கலில் நடப்பு சாம்பியன் இலங்கை வெ.இண்டீசுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் கெய்லுக்கு பிளட்சர் நன்றி
3/21/2016 2:55:23 PM
பெங்களூர்: உலக கோப்பை டி20 தொடரில் நேற்று நடந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி, நடப்பு சாம்பியன் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சம்மி கூறுகையில், ‘‘எங்கள் பவுலிங்கும், பிளட்சரின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது,’’ என்றார். 64 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய பிளட்சர் கூறுகையில், டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில்தான் எனது ஆலோசகர். நான் பேட்டிங் செய்ய களத்திற்கு சென்ற போதும் ஆலோசனைகளை கூறினார். எனக்குள் நம்பிக்கையை விதைத்தற்காக அவருக்கு நன்றி. ஆனால் அவரது பணியை மற்றவர்களால் செய்து விட முடியாது,’’ என்றார். இலங்கை கேப்டன் மேத்யூஸ் கூறுகையில், ‘‘20-30 ரன்கள் குறைவாக எடுத்து விட்ேடாம். மிடில் ஆர்டரில் தடுமாறி விட்டோம்,’’ என்றார்.
இந்த தோல்வியால் இலங்கை அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த போட்டி ஐபிஎல்லில் கெய்லின் ஹோம் டவுனான பெங்களூருவில் நடந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசியபோது, பெங்களூருவில் ரசிகர்களை மகிழ்விப்பேன் என கெயில் கூறியிருந்தார். ஆனால் லேசான தசை பிடிப்பு காரணமாக, நேற்று கெயில் களமிறங்கவில்லை. இதனால் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே 15வது ஓவரின் முதல் பந்தை துஷ்மந்த சமீரா வீசினார். அந்த பந்தை பிளட்சர் எதிர் கொண்டார். பந்து பேட்டில் பட்டு, விக்கெட் கீப்பர் சண்டிமாலிடம் தஞ்சம் புகுந்தது. உடனடியாக அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் டிவி ரீப்ளேவில், பந்து தரையில் பட்டிருப்பது தெரியவந்தது. முன்னதாக கிறிஸ் கெயில் பேடுகளை கட்டிக் கொண்டு, களமிறங்க வந்தார். ஆனால் அம்பயர் இயான் குட் ஓடிச் சென்று, பிளட்சர் அவுட் இல்லை என, கெயிலின் கையை பிடித்து இழுத்து கூறினார். பின்னர் கெயில் பெவிலியனுக்கு திரும்பி சென்றார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.