உத்திரமேரூரில் மக்கள் நீதிமன்றம்
3/21/2016 2:44:07 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் வங்கி கடன் மக்கள் நீதிமன்றம் நேற்று உத்திரமேரூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. உத்திரமேரூர் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வி.சி.சுரேஷ், ஆர்.துரைசண்முகம் முன்னிலை வகித்தனர். பாரத ஸ்டேட் வங்கி உத்தரமேரூர் கிளையின் 25 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. இதில் 2 வழக்குகளில் ரூ.4.40 லட்சம் வங்கிக்கு செலுத்த வேண்டும் என பயனாளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது, உடனடி வசூலாக ரூ.2.30 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இதே போல் மானாம்பதி இந்தியன் வங்கியின் 131 வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இதில் 26 வழக்குகள் முடிவுற்று ரூ.14 லட்சத்து 23 ஆயிரத்து 500 வங்கிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. உடனடி வசூலாக ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்தி 400 வசூலிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் பி.கிருஷ்ணன், தண்டபாணி மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை உதவியாளர் பி.புவிராஜன் செய்திருந்தார்.