அவசர கோலத்தில் ஜெயலலிதா திறந்த உத்திரமேரூர் அரசு கல்லூரியில் அவலம் மாணவர்கள் அமர இருக்கை இல்லை
3/18/2016 2:40:48 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள 750 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ரூ.7 கோடி செலவில் கடந்த ஆண்டு நவ. 20ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் இந்த கல்லூரியை தொடங்கி வைத்தார். இதற்கு முன்பு, உத்திரமேரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்லூரி இயங்கியது.இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அவசர கோலத்தில் திறக்கப்பட்டுள்ளது. கரும்பலகை, நாற்காலி, மேஜை, பெஞ்ச் இல்லை. மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். குடிநீர் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். வாகனங்களை நிறுத்த கல்லூரி வளாகத்தில் இடவசதி இல்லை.
இப்பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் இந்த கல்லூரி உள்ளதால் போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே வேக தடை அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, அடுத்த மாதம் தேர்வு தொடங்க உள்ளது. அப்படி இருக்கையில் மாணவர்கள் தரையில் தேர்வு எழுதும் அவல நிலை உருவாகும். அதற்கு முன்பு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவசர கோலத்தில் திறப்பு விழா காண வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் காணொலி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்ததுதான் மிச்சம், பாதிக்கப்படுவது நாங்கள்தான் என மாணவர்கள் புலம்புகின்றனர். பேராசிரியர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.