ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
3/15/2016 3:10:52 PM
நடிகர், நடிகைகளில் சிலர் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். அதை வெளியில் சொல்ல முடியாமல் திடீர் தற்கொலை மரணங்கள் நிகழ்கிறது. சில வருடங்களுக்கு முன் இதுபோல் சம்பவம் அதிகரித்ததால் பிரச்னையில் சிக்கி இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் தர நடிகர் சங்கம் முடிவு செய்தது. பின்னர் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. நேற்றுமுன்தினம் நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மீண்டும் கவுன்சிலிங் கோரிக்கை வலுத்துள்ளது. குடும்ப பிரச்னை, படங்கள் தோல்வி, புதிய பட வாய்ப்புகள் வராதது, காதல் பிரச்னை என பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் சில நட்சத்திரங்கள் அதை வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் மறைத்து வைத்து புழுங்குகின்றனர்.
அதுவே ஒருநாள் அவர்களை தவறான முடிவை எடுக்க வைக்கிறது. தேவைப்படுபவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க நடிகர் சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளதால் அதுபற்றி சங்க உறுப்பினர்கள் விவாதித்து முடிவெடுக்க உள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னை 28’, ‘திருமணம் எனும் நிக்ஹா’, ‘வடகறி’ என பல படங்களில் நடித்துள்ள ெஜய் சமீபகாலமாக திரையுலக நிகழ்வுகள் எதிலும் தலைகாட்டுவதில்லை. அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது மனநிலையை சகஜநிலைக்கு மாற்றி மீண்டும் திரையுலகில் ஈடுபாடு காட்டுவதற்கான வழிகளை சக நண்பரகள் வெங்கட் பிரபு அன்ட் கோ மேற்கொண்டிருக்கிறதாம்.