பல்லாவரம் எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட் தர கூடாது:அதிமுகவினர் எதிர்ப்பு
3/14/2016 3:05:16 PM
தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ தன்சிங்குக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அதிமுகவினர் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.இதுகுறித்து அதிமுகவினர் சிலர் கூறியதாவது:கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தன்சிங் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.அதன்பிறகு அவர் அதிமுக விழாக்களில் பங்கேற்பது மட்டுமே தனது வேலையாக இருந்தார். மேலும், அப்பகுதியில் நிறைய கோஷ்டிகளை உருவாக்குவதிலும், தன்னை எதிர்ப்பவர்களை ஓரம் கட்டுவதிலும் குறியாக இருந்தார்.மற்றபடி, அவரது தொகுதி பணிகள் அனைத்தையும் அவரது மகன்களே கவனித்து வந்தனர். கடந்த 5 ஆண்டு காலத்தில் தனது தொகுதி மேம்பாட்டுக்காக தன்சிங் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை.
தன்னை வெற்றி பெறவைத்த அதிமுக நிர்வாகிகளையும் உதாசீனப்படுத்தி வந்தார். சட்டசபையிலும் தனது தொகுதி பிரச்னைகள் குறித்து எதுவும் பேசாமல், வெறும் ‘சிட்டிங்’ எம்எல்ஏவாக மட்டுமே இருந்தார்.தொகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களை, தன்னுடைய ஆதாயம் கருதி மாற்று கட்சியினருக்கு அளித்து வந்தார்.இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில், பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தன்சிங் பணம் கட்டியிருந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில், அவருக்கு பல்லாவரம் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று தன்சிங்கின் ஆதரவாளர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.
எனவே, பல்லாவரம் தொகுதியில் தன்சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்லாவரம் தொகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், கடந்த சில நாட்களுக்கு முன் போயஸ் கார்டன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் அலுவலகங்களில் புகார் மனு அளித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.