தகவல் பலகையில் கார் மோதியதில் தந்தை, மகள் பரிதாப பலி
3/14/2016 2:50:09 PM
பெரம்பலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் சேராக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி(40). ரைஸ் மில், அரிசி கடை நடத்தினார். இவரது மகள் சாந்திதேவி. இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., பயோடெக் முதலாமாண்டு படித்து வருகிறார்.இவரை பார்ப்பதற்காக சுந்தரபாண்டி, மனைவி தெய்வானை(39), இளைய மகள் வர்ஷாதேவி(12) ஆகியோருடன் காரில் நேற்று பெரம்பலூர் சென்றார். மகளை பார்த்துவிட்டு மாலையில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்த திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது கார் நிலை தடுமாறி இடதுபுறம் உள்ள இரும்பினாலான தகவல் பலகையின் மீது மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் மீட்புகுழுவினர் சென்று 3 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரபாண்டியன், மகள் வர்ஷாதேவி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.திருச்சியில் தனியார் மருத்துவமனையில் தெய்வானைஅனுமதிக்கப்பட்டுள்ளார்.மங்களமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.