கரூர் மா.செ. விஜயபாஸ்கர் பதவி பறிப்பு : அதிமுகவில் களையெடுப்பு தொடரும்?
3/14/2016 2:49:01 PM
கரூர்: கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்து வந்த செந்தில்பாலாஜி கட்சியில் ‘பவர்புல்’ நபராக இருந்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி, மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் தங்கமணி கூடுதல் பொறுப்பை 2 மாதம் கவனித்து வந்தார்.அதன்பின் தாந்தோணி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்த விஜயபாஸ்கர், தனது சமூகத்தை சேர்ந்த அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிடித்து ஓ.பன்னீர்செல்வம் மூலம் மாவட்ட செயலாளர் பதவியை பிடித்தார். இதற்காக ரூ.1 கோடி வரை பணம் ெகாடுத்ததாகவும் கூறப்பட்டது.
மாவட்ட செயலாளர் ஆன பின், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ காமராஜ் ஆகிய மூவரும் ஒரு அணியாக, செந்தில்பாலாஜியை டம்மியாக்கி செயல்பட்டனர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவைக் கூட, இரு தரப்பினர்களும் தனித்தனியே நடத்தி வந்தனர். தொடர்ந்து, செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்பட்ட சிலர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இவர்கள் இரண்டு அணிகளாக தனித்தனி கோஷ்டிகளாகவே செயல்பட்டு வந்தனர்.மேலும் ஓ.பன்னீர்செல்வம் மூலம் தனக்கு கரூர் தொகுதி நிச்சயம் கிடைக்கும் என திடமாக நம்பிய விஜயபாஸ்கர், தொகுதி முழுவதும் விசிட் அடித்து தேர்தல் வேலைகளையும் பார்க்க தொடங்கினார்.
இந்நிலையில் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு, அமைச்சர் தங்கமணியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் பதவிகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த விஜயபாஸ்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கரூர் அதிமுகவினர் கூறுகின்றனர்.
மேலும் மாவட்ட செயலாளராக விஜயபாஸ்கர் பதவிக்கு வந்த நாள் முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கான்ட்ராக்டர்களையும் அழைத்து கமிஷன் கேட்டு மிரட்டியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது விழுந்தது. மேலும், இவரின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக உள்ளது எனவும், வரும் சட்டமன்ற தேர்தலை இவரை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பது எனவும் இவரின் கட்சியினரே பரவலாக பேசிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.5 மாதம் மட்டுமே மாவட்ட செயலாளராக இருந்த விஜயபாஸ்கரின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் மூலம் பதவி பெற்றவர்களின் பதவியும் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.