சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக மோடி, அமித்ஷா தமிழகம் வருகை தனித்து போட்டியிடவும் வாய்ப்பு
3/14/2016 2:43:34 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜ தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். தனித்து போட்டியிடும் பட்சத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தவும் பாஜ தயாராக உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சரும் தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான ஜவடேகர் சென்னை வந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் முயற்சிகள் ஈடுபட்டார். ஆனால், பாஜ எடுத்த எந்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. தோல்வியில் தான் முடிவடைந்தது. இதனால் பாஜ தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாஜ சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து 2 நாட்கள் நேர்காணல் நடந்தது. இதில் 234 தொகுதிகளில் போட்டியிட மனு அளித்த சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அப்போது, அவர்களிடம் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? தனித்து போட்டியிடலாமா? என்று கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் பாஜவின் செல்வாக்கை காட்ட முடியும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்துக்களை கேட்ட பாஜ கட்சி தலைமையிடம் பேசி முடிவை அறிவிப்பதாக அறிவித்துள்ளது.
‘ஒரு வேளை தனித்து போட்டியிடும் பட்சத்தில் 234 தொகுதியிலும் வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 234 தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியலை தயாராக வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இது ஒரு புறம் இருக்க தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜ தேசிய தலைவர்களை அழைக்கவும் தமிழக பாஜ தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அனேகமாக ஏப்ரல் மாதத்தில் மற்ற மாநிலங்களில் பிரசாரத்தை முடித்து விட்டு அவர்கள் தமிழகம் வருவார்கள் என்று கூறப்படுகிறது.