நேபாளத்தில் சார்க் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடக்கம்: 16ம் தேதி இந்தியா - பாக். பேச்சுவார்த்தை
3/14/2016 2:33:32 PM
காத்மாண்டு: நேபாளத்தில் சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு இன்று தொடங்கியது.சார்க் உச்சி மாநாட்டிற்கு முன்னோட்டமாக கருதப்படும் சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மட்டத்திலான 37வது மாநாடு காத்மாண்டு அருகே பொக்ராவில் இன்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ஆப்கன் துணை வெளியுறவு அமைச்சர் கலீல் ஹர்சாய், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இன்று இணை செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையும், நாளை செயலர்கள் மட்டத்திலான கூட்டமும் நடைபெறுகிறது. செயலர்கள் மட்டத்திலான கூட்டத்தின் போது 16ம் தேதி பாகிஸ்தான் ஆலோசகர் சர்தாஜ் அசிஸூம், இந்திய செயலாளர் ஜெய்சங்கரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்த மாநாட்டின் இறுதி நாளான 17ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை நேபாள பிரதமர் கே.பி. ஒளி தொடங்கி வைக்கிறார்.இந்த கூட்டத்தில் தீவிரவாத ஒழிப்பு, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு, வர்த்தக ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் பேசுகின்றனர்.