சிரஞ்சீவி ரீஎன்ட்ரி படத்தில் நடிக்கிறார் ரஜினி?
3/12/2025 4:47:52 PM
தனது 150வது படமாக ‘கத்தி’ ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்துவருகிறது. சிரஞ்சீவி ரீஎன்ட்ரி ஆக உள்ளதாக தகவல் வெளியானவுடனே பல நட்சத்திரங்கள் அவர் படத்தில் நடிக்க விரும்புவதாக ஆசை வெளியிட்டனர். தற்போது சிரஞ்சீவியின் ரீ என்ட்ரி படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிரஞ்சீவி தரப்பில் விசாரித்தபோது மறுக்கவில்லை. ஒருமுறை சிரஞ்சீவியும், ரஜினியும் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நீங்கள் ரீஎன்ட்ரி ஆகும் படத்தில் என்னையும் நடிக்க அழைக்க வேண்டும்’ என்று ரஜினி கூறியிருந்தாராம். அந்த வார்த்தையை சிரஞ்சீவி இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் 5 அல்லது அதற்கும் அதிகமான நிமிடங்கள் இடம்பெற உள்ளது. ஏற்கனவே ரஜினியும், சிரஞ்சீவியும் தமிழில் ‘ராணுவ வீரன்’ படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.