விளையாட்டு துறையில் மாஜி நடிகை
3/11/2025 2:58:01 PM
பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்றவர்கள் கிரிக்கெட் அணிகளுக்கு உரிமையாளர்களாக இருப்பதுபோல் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கால்பந்து அணியை வாங்கி உள்ளனர். அதுபோல் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் பேட்மின்டன் அணியை வாங்கி இருக்கிறார். இதற்கிடையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி சினிமா தயாரிப்பாளராகி இருக்கும் மாஜி நடிகை ஹீரோயின் குட்டி பத்மினி விளையாட்டு துறைக்கு வந்திருக்கிறார். கிரீடா என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்கி இருக்கிறார். கிரிக்கெட் வீரர் முரளி விஜய், விஷால் தொடங்கி வைத்தனர். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த மையம் முறையான பயிற்சி அளிக்குமாம்.
தென்னிந்திய நடிகர் சங்கமும் நட்சத்திர கிரிக்கெட் நடத்தி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினி, கமல் இருவரையும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை நடிகர் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.