அரவாணியாக நடித்தபோது என் கதை முடிந்தது என்றார்கள் விஷால் குமுறல்
3/10/2025 3:09:26 PM
பெண்கள் அமைப்பு நடத்திய விழா ஒன்றில் பங்கேற்று விஷால் பேசினார். அவர் கூறியது:நடிகனாக வந்தால் வெற்றி மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. தோல்வி அடைந்தவர்களை மண்ணுக்குள் போட்டு மூடி விடுகிறார்கள். என் முதல் படம் ‘செல்லமே’ வந்தபோது ஏளனமாக பேசியவர்கள் பிறகு தாங்கள் கஷ்டத்தில் இருப்பதாகவும் படம் செய்து தரும்படியும் கேட்டார்கள். அது என் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் 17 நாள் கிடைத்த அனுபவம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.
அரவாணி வேடம் ஏற்றிருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல படப்பிடிப்பிலேயே சிலர் கிண்டல் கேலி செய்தனர். பெண் வேடம் போட்டிருந்தபோது என் சேலையை கொஞ்சம் விலக்கும்படி கேமராமேன் கூற நான் மறுத்துவிட்டேன். புதுமுக நாயகி கிளாமராக நடிக்கும்போது தன் குடும்பத்தை நினைத்து எப்படி பதைபதைப்புடன் இருப்பார் என்று அப்போது எண்ணினேன். ‘அவன் இவன்’ படத்தில் அரவாணி வேடம் ஏற்றபோது என்னுடைய கேரியர் இந்த படத்துடன் முடிந்தது என்று என் காதுபட கூறினார்கள். அதைபற்றி சிந்திக்கவில்லை. நான் கடவுளாக மதிக்கும் இயக்குனர் பாலா சொன்னதை செய்தேன்.இவ்வாறு விஷால் கூறினார்.