மாதவன் கதையில் பெண் இயக்குனர் திடீர் திருத்தம்
3/9/2025 3:11:35 PM
மாதவன், ரித்திகா சிங் நடித்த படம் ‘இறுதிச் சுற்று’. மணிரத்னம் உதவியாளர் சுதா இயக்கினார். படம் திரைக்கு வந்து ஹிட்டானது. இந்தியிலும் ‘சாலா கடூஸ்’ பெயரில் வெளியானது. தற்போது இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க ரீமேக் ஆக உள்ளது. ரித்திகா சிங் குத்து சண்டை வீராங்கனையாகவே மீண்டும் நடிக்கிறார். தெலுங்கிற்காக இக் கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்யும்படி இயக்குனரிடம் வெங்கடேஷ் கேட்டுக் கொண்டார். தனது இமேஜ் கருதி இந்த மாற்றம் செய்யவேண்டும் என்று அவர் கூறியதை இயக்குனர் ஏற்றுக்கொண்டார்.
குத்துச் சண்டை பயிற்சியாளராக வரும் மாதவன் கதாபாத்திரத்தின் மனைவி கேரக்டர் வேறு ஒருவருடன் ஓடிப்போனதுபோலவும், அந்த வெறுப்பில் பல பெண்களுடன் மாதவன் கதாபாத்திரத்துக்கு தொடர்பு இருப்பதுபோலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. தெலுங்கில் வெங்கடேஷின் மனைவி கதாபாத்திரம் கணவர் மீது அளவுகடந்த அன்பு காட்டுபவராக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் கதைக்கருவில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை என இயக்குனர் தரப்பு தெரிவிக்கிறது.