திருநாவுக்கரசர் வாரிசு களம் இறங்குகிறார்
3/9/2025 3:02:49 PM
திருச்சி: அதிமுக துவங்கப்பட்ட காலத்தில் துடிப்பான இளைஞராக அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த தீயத்தூர் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு. வக்கீலுக்குப் படித்தவர்.1977ல் அதிமுக முதன்முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்தித்தது. இதில் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியும் கிடைத்தது. 80, 84ம் ஆண்டுகளில் அதே தொகுதியில் வெற்றிபெற்று தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின், அதிமுக இரண்டாக உடைந்ததும் ஜெ. அணியில் முக்கிய பொறுப்பில் இருந்து அந்த அணியை வழிநடத்தியவர்களில் திருநாவுக்கரசுவும் ஒருவர். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியை திருநாவுக்கரசு ஆரம்பித்தார். தற்போது அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக(ஆந்திர மாநில பொறுப்பாளர்) உள்ளார். அகில இந்திய அரசியலில் பொறுப்பு வகித்து வரும் திருநாவுக்கரசர் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது வாரிசை களம் இறக்க முடிவு செய்துள்ளார்.அறந்தாங்கி தொகுதியில் தனது மகன் ராமச்சந்திரனை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த விருப்ப மனு கொடுத்து உள்ளார். பொறியாளரான ராமச்சந்திரன் அமெரிக்காவில் எம்.எஸ். படித்துள்ளார்.