கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
3/9/2025 3:01:24 PM
கும்மிடிப்பூண்டி: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் வந்த அவர், தேர்தல் அதிகாரி சாந்தகுமாரை சந்தித்து, ‘கும்மிடிப்பூண்டியில் ஆங்காங்கே தேர்தல் விழிப்புணர்வு பேனர்களை வைக்க வேண்டும்’ என்றார்.பின்னர் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளான கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுலாபுரம், எலாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நடுநிலைப் பள்ளிகளின் வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அதனருகே உள்ள சுவர்களில் ஒட்டியுள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு செயல் அலுவலர் ரவியிடம் கூறினார். பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாதர்பாக்கம், எருக்குவாய், தண்டலச்சேரி ஆகிய இடங்களில் தேர்தலின்போது அதிக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி சாந்தகுமாரிடம் கலெக்டர் கூறினார். கலெக்டரிடம், ‘ஆங்காங்கே அதிமுக கட்சியின் பேனர்களும், சுவரொட்டிகளும் காணப்படுகிறதே?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்: 9444123456 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.