கலாபவன்மணி மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் பிரபல நடிகர் வலியுறுத்தல்
3/8/2025 3:14:39 PM
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன்மணி கடந்த சனிக்கிழமை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் இரவு 7.15 மணியளவில் அவர் மரணமடைந்தார். கலாபவன்மணியின் திடீர் மறைவு திரை உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் கல்லீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடலில் மெத்தனால் என்ற உயிரை பறிக்கும் வேதி பொருள் கலந்திருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முதற்கட்ட பரிசோதனையில் கல்லீரல் பாதிப்புதான் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடலில் மெத்தனால் கண்டுபிடிக்கப்பட்டதால் உடற்கூறு பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து கல்லீரல் உள்பட முக்கிய உறுப்புகள் சோதனைக்காக கொச்சியில் உள்ள அரசு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை அறிக்கை கிடைக்க ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். இதற்கிடையே நடிகர் கலாபவன்மணியுடன் அவரது பண்ணை வீட்டில் வைத்து பிரபல மலையாள நடிகர் ஜாபர்இடுக்கி உள்பட 5 பேர் மது அருந்தியது தெரியவந்தது. ஜாபர் இடுக்கி உள்பட அனைவரையும் திருச்சூர் அதிரடிப்படை டிஎஸ்பி சுதர்சன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் நடிகர் ஜாபர் இடுக்கி கூறியது, கலாபவன்மணி கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்தது.
அதற்கு முந்தையநாள் (வெள்ளக்கிழமை) நான் உள்பட 5 பேர் கலாபவன்மணியின் பண்ணை வீட்டில் சந்தித்து பேசினோம். அப்போது மணி பீர் மட்டுமே குடித்தார். வேறு எந்த மது வகைகளையும் குடிக்கவில்லை. அன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆரோக்கியமாகவும் இருந்தார். எங்களுடன் சினிமா துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இருந்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், மணியின் உறவினர்கள் சிலரும் உடன் இருந்தனர். நட்பை புதுப்பிப்பதற்காகவும், ஒரு சினிமா குறித்து ேபசுவதற்காகவும் தான் அவரது வீட்டிற்கு சென்றேன். அவர் தற்கொலை செய்ததாக நான் நம்பவில்லை. அவரது உடலில் விஷம் கலந்திருந்தது உண்மையானால் அது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.