தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் துணை ராணுவம் அனுப்புவது குறித்து உள்துறை அமைச்சர் ஆலோசனை
3/3/2025 3:35:33 PM
சென்னை, - தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலுக்கு எவ்வளவு துணை ராணுவ வீரர்கள், எந்த பகுதியில் இருந்து அனுப்புவது குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை மறுதினம் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறும் தேர்தலையொட்டி புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. ஆனால், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 5 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளனர்.
தமிழகத்தில் வடமாவட்டங்களில் பல பகுதிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கூடுதல் துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். கடந்த 2011ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் 240 பட்டாலியன் ராணுவ வீரர்கள் வந்திருந்தனர். ஒரு பட்டாலியனில் 72 வீரர்கள் இடம் பெறுவார்கள்.இந்நிலையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு எவ்வளவு துணை ராணுவ வீரர்கள், எந்தெந்த பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், டெல்லி உள்துறை அமைச்சகத்தில் உள்ள, சட்டமன்ற தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கான உள்துறை பொறுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்திய எல்லை பகுதியான காஷ்மீர், பஞ்சாப், அசாம், சிக்கிம், மேற்குவங்கம், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எவ்வளவு பேரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்து அனுப்பலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள்.