அமெரிக்க ஓபன் தோல்வியில் இருந்து மீள மிதவைகளின் துணையுடன் ஆற்றில் நீந்தி மகிழ்ந்த செரீனா
10/8/2025 2:36:03 PM
நியூயார்க்: பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், விளையாட்டில் மட்டுமின்றி ஆடை வடிவமைப்பிலும் அதிக ஆர்வம் காட்டுபவர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த பேஷன் ஷோவில் செரீனா வடிவமைத்த ஆடைகளை அணிந்து அழகிகள் ‘கேட் வாக்’ சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இத்தாலி வீராங்கனை ராபர்டா வின்சியிடம் தோல்வி கண்டதன் மூலம், ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றவர் என்ற சாதனையை படைக்க செரீனா வைத்திருந்த திட்டம் முறிந்து போனது. இதனால், மனவேதனை அடைந்த செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டில் மீதமுள்ள டென்னிஸ் போட்டிகள் எதிலும் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில், தனக்கு மீண்டும் புத்துணர்ச்சிஊட்டும் நடவடிக்கைகளில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். 34 வயது செரீனா வில்லியம்ஸ் கடந்த வார இறுதியில் தனது நண்பர் கால்டன் ஹெய்ன்சுடன் டெக்சாஸில் உள்ள சான் மார்க்கோஸ் ஆற்றுக்குச் சென்றார். சான் மார்க்கோஸ் ஆறு ‘பார்ட்டி’களுக்கு பெயர் போன சுற்றுலா தலம். அங்கு குழுமும் அமெரிக்க மக்கள் மது பானங்களை அருந்திவிட்டு, காற்றடைத்த மிதவைகளை பயன்படுத்தி ஆற்றில் நீந்தி பொழுது போக்குவது வழக்கம். சான் மார்க்கோஸ் ஆற்றுக்கு நண்பர்களுடன் சென்ற செரீனா அங்கு தான் வடிவமைத்த நீச்சலுடையில் மிதவைகளின் உதவியுடன் உற்சாகம் பொங்க நீந்தி மகிழ்ந்தார். சான் மார்க்கோஸ் ஆற்றில் நீச்சலுடையில் தான் வார இறுதியை கழித்த புகைப்படங்களை செரீனா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார்.