சீன ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ராட்வான்ஸ்கா
10/8/2025 2:35:18 PM
பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா முன்னேறியுள்ளார்.பெய்ஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று மூன்றாம் சுற்று ஆட்டங்கள் நடந்தன. போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீய்சுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டில் அதிரடியாக ஆடிய ராட்வான்ஸ்கா, மேடிசன் கீய்சின் சர்வீஸ் கேமை ஒரு முறை முறியடித்தார். காயத்தால் தடுமாறிய மேடிசன் கீய்ஸ், ராட்வான்ஸ்காவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறினார். முதல் செட்டை அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா 6-3 என்ற கேம் கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டில் விளையாடினால் காயத்தின் தன்மை அதிகரிக்கும் என்று உணர்ந்த மேடிசன் கீய்ஸ், ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால், அக்னீஸ்கா ராட்வான்ஸ்கா காலிறுதிக்கு முன்னேறினார்.சுவிஸ் வீராங்கனை டிமியா பாக்சின்ஸ்கி, ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவரோவுடன் மூன்றாம் சுற்றில் மோதினார். இதில் முதல் செட்டை வென்ற பாக்சின்ஸ்கி, அடுத்த செட்டை இழந்தார். மூன்றாம் செட்டில் சுதாரித்து ஆடி பாக்சின்ஸ்கி வெற்றியை தன் வசப்படுத்தினார். டிமியா பாக்சின்ஸ்கி 6-4, 4-6, 7-5 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலீக் கெர்பர், இத்தாலி வீராங்கனை சாரா எர்ரானி ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 7-6(3), 6-4 என நேர் செட்களில் கனடா வீரர் போஸ்பிசிலை வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர், அமெரிக்காவின் ஜாக் சோக், சீன வீரர் லூ ஆகியோரும் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.