கட்டாக் சம்பவம், படேல்கள் போராட்டம் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை; அடையாள அட்டை அவசியம் : இந்தியா-தெ.ஆ. ஒரு நாள் தொடருக்கு பலத்த பாதுகாப்பு
10/8/2025 2:34:25 PM
கான்பூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கட்டாக்கில் நடந்த 2வது டி20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியாவின் மோசமான ஆட்டத்தால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். கட்டாக் சம்பவம் எதிரொலியால், அடுத்து நடைபெற உள்ள ஒரு நாள் தொடருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் 11ம் தேதி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியின் போது, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சிற்றுண்டிகளை மைதானத்திற்குள் கொண்டு வர, கான்பூர் போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளனர். கான்பூர் போலீஸ் உயரதிகாரி ஷலாபா மாத்தூர் கூறுகையில், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள் மற்றும் உலோகம் சார்ந்த எந்த பொருளையும் மைதானத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றார்.
இது தவிர வேறு ஏதேனும் ெபாருட்களை தூக்கி எறிந்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டாலும், மைதானத்திற்குள் வந்து விழாமல் தவிர்க்கும் வகையில், கேலரிகளின் முன்பாக 10 அடிக்கு வலைகளை அமைக்கும் பணியிலும் கான்பூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்தூர் ஹோல்கர் மைதானத்தில், 14ம் தேதி நடைபெறும் 2வது ஒரு நாள் போட்டியின் போதும், தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரவும், மைதானத்திற்குள் விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.3வது ஒரு நாள் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில், 18ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இடஒதுக்கீடு கேட்டு குஜராத்தில் போராட்டம் நடத்தி வரும் படேல் சமூக மக்கள், தங்கள் கோரிக்கை வலுப்பெரும் வகையில், அதிக அளவில் ராஜ்கோட் மைதானத்திற்கு வர வேண்டும் என, அச்சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் போட்டி முடிந்ததும் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதாக, அம்மாநில முதல்வர் ஆனந்திபென் படேலும் உறுதியளித்துள்ளார். இதனால் 3வது போட்டிக்கான டிக்கெட் வாங்கும் போது, பார்வையாளர்கள் தங்கள், அடையாளத்திற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் 2 டிக்கெட்டுகளை மட்டுமே வாங்க முடியும்.