அரசு விளம்பரங்களில் பிரதமர் படம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு
10/8/2025 2:26:59 PM
புதுடெல்லி: மத்திய அரசின் விளம்பரங்களில் பிரதமர் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் படங்களை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரது படங்களை தவிர மற்ற யார் படத்தையும் அரசு விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது என கடந்த மே 13ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலத்தின் அதிகாரத்தில் தலையிடுவதாக கருத்து தெரிவித்தன.
இதையடுத்து தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டது. இந்நிலையில் அரசு விளம்பரங்களில் பிரதமர் படத்தையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதே அரசு சாரா அமைப்பு தற்போது புதிய மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. அரசு விளம்பரங்களில் பிரதமருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும், இதனால் அரசு விளம்பரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் வகுத்த விதிமுறைகள் எழுத்து பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் மீறப்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட் மூத்தவக்கீல் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.