பீகாரில் பிரதமர் மோடி பிரசாரம் : 4 இடங்களில் பேசுகிறார்
10/8/2025 2:22:23 PM
பாட்னா: பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். 4 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதையொட்டி, கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதள தலைமையிலான கூட்டணிக்கும், பாஜ தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கூட்டணியில், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாஜ தலைமையிலான கூட்டணியில், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை உள்ளன.ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நிதீஷ்குமார் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இவரது கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தமுறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜ செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜவின் முக்கிய தலைவர்கள் பீகாரில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், பிரதமர் மோடியும் பீகார் தேர்தலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். பாஜவுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஏற்கனவே பிரசார கூட்டங்களில் பேசியுள்ளார்.பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பாஜவினர் இந்த தேர்தலை சந்திக்கின்றனர். எனவே, தேர்தல் நெருங்கும் நிலையில், அதிக பொதுக்கூட்டங்களில் பிரதமர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்தவகையில், பிரதமர் மோடி இன்று முங்கர், சமஸ்திபூர், நவாடா, பெகுசரய் ஆகிய 4 இடங்களில் உரையாறுகிறார். நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களிலும் மோடி பங்கேற்கிறார். நாளை மறுநாளும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. தேர்தல் வரும் 12ம் தேதி தொடங்கி, நவம்பர் 5ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடக்கிறது. வாக்குகள் நவம்பர் 8ம் தேதி எண்ணப்படுகின்றன.