கிழக்கு கடற்கரை சாலையில் 5 ஆண்டுகளாக முடியாத பாலப்பணி
10/7/2025 2:33:59 PM
திருப்போரூர்: கிழக்கு கடற்கரை சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி 5 ஆண்டுகளாகியும் இதுவரை முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தேவனேரி, பட்டிபுலம், சூளேரிக்காடு, நெம்மேலி, வட நெம்மேலி, கிருஷ்ணன் காரணை உள்ளிட்ட 10 கிராம மக்கள், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு, மின் வாரியம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, கந்தசுவாமி கோயில் ஆகியவற்றுக்கு செல்ல, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள திருப்போரூர் வந்து செல்கின்றனர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர்கள் தங்களின் மீன்களை திருப்போரூரில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடையே பக்கிங்காம் கால்வாய் உள்ளதால், மேற்கண்ட பகுதி மக்கள் கோவளம், கேளம்பாக்கம் வழியாகவோ அல்லது மாமல்லபுரம், பையனூர் வழியாகவோ 30 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், இப்பகுதி மக்களின் நலன் கருதி கடந்த திமுக ஆட்சியில், கிழக்கு கடற்கரை சாலையையும், பழைய மாமல்லபுரம் சாலையையும் இணைக்கும் வகையில் சுனாமி புனரமைப்பு திட்டத்தின் கீழ், திருப்போரூரில் பக்கிங்காம் கால்வாய் மீது ரூ. 4.8 கோடியில் உயர் மட்ட பாலம் மற்றும் இணைப்பு சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி திட்டப்பணிகள் துவங்கின.
தற்போது, பாலப்பணிகள் முடிந்த நிலையில் இருபக்க சாலைகள் அமைத்தல், ரிவிட்மெண்ட் எனப்படும் சாலைச்சரிவு அமைத்தல் ஆகிய பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. பாலத்தின் கிழக்கு முனையில் இருந்து நெம்மேலி வழியாக இன்னும் தார் சாலை முழுமையாக அமைக்கப்படவில்லை.நெடுஞ்சாலை துறை நிர்வாகம் 90 சதவீத பணியை முடித்து விட்ட நிலையில், 10 சதவீத பணியை மட்டும் முடிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.இதனால், இப்பகுதி மக்கள் தினசரி கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பாலப்பணியை விரைவில் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.