அஸ்ட்ரோசாட், 6 வெளிநாட்டு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-30 விண்ணில் பாய்ந்தது
9/28/2015 2:33:49 PM
சென்னை: பிஎஸ்எல்வி - சி30 ராக்கெட் அஸ்ட்ரோசாட் மற்றும் 6 வெளிநாட்டு செயற்கைகோளுடன், ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. திட்டமிட்டபடி அதன் சுற்றுவட்டபாதையில் இந்த செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம், அதிக ஆற்றல் வாய்ந்த அலைவரிசைகளை ஆராய்ச்சி செய்துவரும் நாடுகளில் இந்தியாவும் இணைந்து புதிய சாதனையை படைத்துள்ளது. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் கிரண்குமாருக்கு விஞ்ஞானிகள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி ஆய்வு செய்து வருகிறது.
நவீன தொலைதொடர்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட ஆராய்ச்சிகளுக்காக இஸ்ரோ செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. முதன்முறையாக வானியல் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு அஸ்ட்ரோசாட் செயற்கைகோளை பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டது. இந்த செயற்கைகோள் விண்ணில் உள்ள புற ஊதா கதிர்கள், குறைந்த, அதிக ஆற்றல் வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு அலைவரிசைகளில் ஆய்வு செய்யும். இவ்வகை செயற்கைகோள்களை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்ணில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அஸ்ட்ரோசாட் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான 50 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து திட்டமிட்டப்படி, இன்று காலை 10 மணிக்கு பிஎஸ்எல்வி - சி30 ராக்கெட், அஸ்ட்ரோசாட் மற்றும் இந்தோனேசியாவின் லெபான் -ஏ2 (76 கிலோ), கனடாவின் என்எல்எஸ் 14 (14கிலோ), அமெரிக்காவின் லெமூர் வகையில் 4 என 7 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.
தொடர்ந்து 25வது நிமிடம் 32வது நொடியில், பூமியிலிருந்து 650 கி.மீட்டர் உயரத்தில் அதன் சுற்றுவட்டபாதையில் அஸ்ட்ரோசாட் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வானிலை ஆராய்ச்சிக்காக செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பிய நாடுகள் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்து மகத்தான சாதனை புரிந்துள்ளது. இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதுவரை பிற நாடுகள் அனுப்பியுள்ள வானியல் ஆய்வுக்கான செயற்கைகோள்கள் குறைந்த அலைவரிசைகளை மட்டுமே ஆய்வு செய்யும் திறன் கொண்டது. ஆனால் இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைகோள் குறைந்த, அதிக ஆற்றல் கொண்ட அலைவரிசைகளை ஆய்வு செய்யும் திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்ட்ரோசாட் செயற்கைகோளின் மொத்த எடை 1,513 கிலோ. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். அஸ்ட்ரோசாட்டில் பொருத்தியுள்ள ஆய்வுக்கருவிகளை, டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோ வடிவமைத்துள்ளது. அதுமட்டுமின்றி தனிசிறப்பு வாய்ந்த 2 ஆய்வுக் கருவிகளை கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ளது.