திருத்தணி அருகே ஊர்க்காவல் படை வீரர் திடீர் மரணம்...
9/28/2015 2:29:19 PM
திருத்தணி: திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரம், அருந்ததியர் காலனியில் வசித்தவர் மந்தவெளி மகன் கோவிந்தராஜ் (44). இவர், கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, திருத்தணி காவல் நிலையங்களில் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதைத் தொடர்ந்து, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று மாலை கோவிந்தராஜ் பரிதாபமாக பலியானார். இதனால் அவரது குடும்பத்தினரும் ஊர்க்காவல் படையினரும் அதிர்ச்சியடைந்தனர்.
பொதுவாக, போலீசார் உட்பட அரசு ஊழியர்களின் பணிக் காலத்தில் குரூப் இன்சூரன்ஸை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொருவரின் சம்பளத்தில் ₹150 பிடித்தம் செய்யப்படும். அவர்கள் இறக்கும்பட்சத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கு ₹3 லட்சம் இறப்பு நஷ்டஈடாக வழங்கப்படுகிறது. ஆனால், போலீசாருடன் ஊர்காவல் படையில் பணிபுரிபவர்களுக்கு இத்திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்படவில்லை. இத்திட்டத்தை ஊர்க்காவல் படையினருக்கும் அமல்படுத்த வேண்டும். இறந்துபோன கோவிந்தராஜின் ஏழ்மையான குடும்பத்துக்கு ₹3 லட்சம் இறப்பு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோவிந்தராஜின் உறவினர்களும் ஊர்க்காவல் படையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.