ஆஸ்திரேலிய அணிக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் வங்கதேச உள்துறை அமைச்சர் நம்பிக்கை
9/28/2015 2:19:19 PM
டாக்கா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் (அக். 9-13, அக். 17-21) கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று (28ம் தேதி) வங்கதேசம் செல்வதாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு இருக்காது என, அந்நாட்டின் வெளியுறவு வர்த்தக துறை (டிஎப்ஏடி) எச்சரிக்கை விடுத்ததையடுத்து, ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்துக்கு கிளம்புவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுசமன் கான் கமால் கூறுகையில், ஆஸ்திரேலியா அதன் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் இது அடிப்படை ஆதாரமற்ற கவலை. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு அணிகள் இங்கு வந்து விளையாடியுள்ளன. இங்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் துப்பறியும் நிறுவனங்களிடமும் பேசி விட்டேன். எத்தகைய ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு முழு பாதுகாப்பை கொடுக்க முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். வங்கதேச மக்கள் அமைதியையும், அன்பையும் விரும்புபவர்கள். அவர்கள் தீவிரவாதத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள், என்றார்.
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் கூறுகையில், திட்டமிட்டபடி இந்த தொடர் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்குதான் நாங்கள் முன்னுரிமை அளிப்போம்,’’ என்றார். இது ஒரு பொதுவான எச்சரிக்கைதான் என்றும், இங்கு வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என வங்கதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதனிடையே கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அதிகாரி சீன் கரோல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பீடு செய்ய இன்று வங்கதேசம் செல்கிறார்.