இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிக்க முடிவு ஐசிசி, பிசிசிஐக்கு விடுக்கும் அச்சுறுத்தலா? பாக். வாரியத்துக்கு ராஜிவ் சுக்லா கேள்வி
9/27/2015 2:34:15 PM
மும்பை: இந்தியா-பாகிஸ் தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரை, வரும் டிசம்பர் மாதம், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இந்த தொடரில் விளையாட இந்தியா மறுத்து வருகிறது. இத்தொடரில் இந்தியா விளையாடாவிட்டால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் ஏசிசி (ஆசியன் கிரிக்கெட் கவுன்சில்) நடத்தும் தொடர்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் ஷகாரியார் கான் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.
இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷகாரியார் கானின் இந்த அறிக்கை, ஐசிசி மற்றும் பிசிசிஐக்கு விடுக்கும் அச்சுறுத்தலா என ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ஐசிசியின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டே பிசிபி இயங்குகிறது. இதை மீறினால் அபராதம் கட்ட வேண்டும். ஐசிசி, ஏசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணித்தால், பிசிபி அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். இதை எதிர்த்து நான் முறையீடு செய்ய போகிறேன்.
இந்த வழக்கின் சுமைகளை பிசிபி தாங்க நேரிடும். பிசிபியால், வீரர்களின் பாதுகாப்பில் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பாதுகாப்பை காரணம் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேச அணிகள் கூடத்தான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. ஒரு வேளை இந்த தொடர் இறுதி வடிவம் பெற்றாலும், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் பல உள்ளன. இதனால் டிசம்பரில் இந்த தொடர் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.