சித்தாமூர் ஒன்றியத்தில் 4 தூய்மை ஊராட்சிகள் தேர்வு
9/26/2015 12:41:50 PM
மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்து சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது மழுவங்கரணை, மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், கொளம்பாக்கம் ஊராட்சிகள். இந்த 4 ஊராட்சிகளும் தூய்மையான ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தூய்மையான ஊராட்சிகளின் முக்கிய அம்சங்களாக, ஊராட்சியை சேர்ந்த மக்கள் காலைக்கடன்களை கழிக்க வெளியே செல்ல மாட்டார்கள். அவரவர் வீட்டில் அமைக்கப்பட்டு உள்ள தனி கழிவறைகளையே பயன்படுத்துவார்கள்.இந்த நிலையில், தூய்மையான ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மழுவங்கரணை ஊராட்சியின் கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், மகாலிங்கம், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணா, ஊராட்சி செயலர் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணி, கூட்டம் போன்றவை நடைபெற்றது. அங்கிருந்த மாணவர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் ஆகியோர் ‘தனிநபர் கழிவறையைப் பயன்படுத்துவோம், அரசு பொது இடங்களை அசுத்தப்படுத்த மாட்டோம். மழைநீரை சேகரிப்போம்’ என்பது போன்ற உறுதிமொழிகளை ஏற்றனர்.