கோ. ப. அன்பழகன் பிறந்த நாள் ரூ50 லட்சம் நலத்திட்ட உதவிகள்
9/26/2015 12:39:40 PM
மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் 13ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகனின் பிறந்தநாள் விழா, பங்காரு அடிகளாரின் 75ம் ஆண்டு பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மேல்மருவத்தூரில் உள்ள ஞான பீடத்தில் நேற்று காலை கொண்டாடப்பட்டன.கோ.ப.அன்பழகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தை பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். பிறகு ஞானபீடத்தில் பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆன்மிக இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன், ஆன்மிக இயக்க இளைஞரணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் இணைந்து கேக் வெட்டினர். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பக்தர்கள், குழந்தைகள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. அங்குள்ள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.இதன்பிறகு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கறவை மாடு, தையல் இயந்திரம், இரு சக்கர சைக்கிள், கல்வி உதவி தொகை, 10 இருளர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி தரப்பட்டு அதற்கான சாவிகள் அவர்களிடம் வழங்கப்பட்டன. விழாவில் ரூ.50 லட்சம் மதிப்பில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, பாண்டிச்சேரி, ஆந்திர மாநிலம் நகரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆன்மிக தொண்டு இயக்கத்தினர், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றில் சுகாதார பணிகளை தொண்டு பணிகளாக மேற்கொண்டனர்.முப்பெரும் விழாவில், ஆஷா அன்பழகன், அகத்தியன், மதுமலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.