சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
9/26/2015 12:38:55 PM
மீனம்பாக்கம்,: சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ பட ஷூட்டிங் ரகசியமாக நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது கபாலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இப்படத்துக்கான பூஜை நடந்தது. இதையடுத்து, சென்னை நகரில் இப்படத்தின் படப்பிடிப்பு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தப்படுகிறது.இந்நிலையில், ரஜினிகாந்த் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வருவது போலவும், விமானத்தில் இருந்து இறங்கி வெளியே செல்லும் அவர், காரில் புறப்பட்டு செல்வது போன்ற காட்சிகள் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரகசியமாக படமாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இதில், சர்வதேச முனையத்தில் புறப்பாடு பகுதி பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.ஆனால், வருகை பகுதியை இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அப்படி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கபாலி பட ஷூட்டிங் நடந்தது.இது பற்றிய பாதுகாப்பு குறித்து விமான நிலைய போலீசாரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இதனால், போலீசாருக்கும் இதுபற்றி தகவல் கிடைக்கவில்லை. அவ்வழியாக விமான நிலைய ஊழியர்கள் செல்ல அனுமதி கிடையாது. இதையொட்டி, அங்குள்ள ஊழியர்களுக்கும் தெரியாமல ஷூட்டிங் நடந்தது.