திப்பு சுல்தான் வேட சர்ச்சை? ரஜினி பதில் என்ன? பட அதிபர் தகவல்
9/26/2015 12:32:19 PM
திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கன்னட பட தயாரிப்பாளர் அசோக் கெனி எம்எல்ஏ தெரிவித்திருந்தார். அதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்கக்கூடாது என்றும் கூறின. இதுபற்றி ரஜினி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு குறித்து தயாரிப்பாளர் அசோக் கெனி கூறியது: சுமார் 2 வருடத்துக்கு முன் ரஜினியை சந்தித்தபோது படம் தயாரிக்க முடிவு செய்தேன். சரித்திர படங்களில் எனக்கு ஆர்வம். காந்தி, முகல் இ ஆசம் படங்கள்போல் தயாரிக்க ஆசை. ரஜினியுடன் மராட்டிய சிவாஜி படம் தயாரிக்க பேசினேன். தொடர்ந்து பேசியபோது வெள்ளையர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற திப்பு சுல்தான் சரித்திரத்தை தயாரிக்கும் எண்ணத்தை வெளியிட்டேன்.
ரஜினிக்கும் பிடித்திருந்தது. அதுபற்றி ஆராய்ச்சி செய்து ஸ்கிரிப்டுடன் வரும்படி கூறினார். திப்புவாக ரஜினி நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்ததுபற்றி அறிந்தேன். அவர்களிடம் ஒன்று கேட்கிறேன். திப்பு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானவர் என்றால் அவரைபற்றி எப்படி புத்தகத்தில் பாடம் வைப்பார்கள். ‘நீனே பாரி நீனே’ படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டேன். அடுத்து திப்பு சுல்தான் படத்தை பெரிய அளவில் தயாரிக்க எண்ணி உள்ளேன். திப்புவாக நடிப்பது குறித்து எழுந்த சர்ச்சைபற்றி ரஜினி என்ன சொல்கிறார் என்கிறார்கள். திப்பு சுல்தான் பற்றிய ஸ்கிரிப்ட் தயார் செய்தபிறகுதான் அவரை நான் சந்திக்க உள்ளேன். இவ்வாறு அசோக் கெனி கூறினார்.