கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு
9/5/2025 12:52:55 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வெங்கடாபுரத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா நடத்த அனுமதி மறுத்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் இன்று காலை குவிந்தனர். இதனால் பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா நடத்த ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு மற்றொரு சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவிழா நடத்த தடை செய்யப்பட்டதாத தெரிகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் நேற்றிரவு கலெக்டர் சண்முகத்தின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் சந்திரசேகரன், காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் சாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை (இன்று) காலை 7 மணிக்கு கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருப்பதாகவும், தற்போது அவர் வெளியே இருப்பதாகவும் வட்டாட்சியர் சந்திரசேகரன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில் போலீசார் கூறியபடி இன்று காலை வெங்கடாபுரம் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதுபோன்று மற்றொரு சமுதாய மக்களும் குவிந்தனர். இதனால் அசம்பவாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.