இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தண்டி யாத்திரை ஹர்தீக் படேலின் அடுத்த வியூகம்
9/2/2025 3:13:29 PM
அகமதாபாத்: குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி காந்தி அடிகள் நடந்து சென்ற தண்டியில் இருந்து அகமதாபாத்துக்கு யாத்திரை செலல ஹர்தீக் படேல் முடிவு செய்துள்ளார்.குஜராத்தில் படேல் ஜாதியினர் தங்களுக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் 22 வயது இளைஞர் ஹர்தீக் படேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 10 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் மூலம் தேசத்தையே தன் பக்கம் கவனத்தை திருப்பினார் ஹர்தீக் படேல். மேலும் இட ஒதுக்கீடு கேட்டு வட மாநிலங்களில் போராட்டம் நடத்தி வரும் ஜாட், குஜ்ஜார் உள்ளிட்டவர்களோடு இணைந்து படேல் இணைத்தவரும் போராட்டம் நடத்துவர் என்று அறிவித்தார்.கடந்த 1930ம் ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்து மகாத்மா காந்தி குஜராத்தில் உள்ள அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி நோக்கி யாத்திரை நடத்தினார். இது தண்டி யாத்திரை என்று புகழ் பெற்றது. இந்த போராட்டம் ஆங்கிலேயர்களை உலுக்கியது.
தற்போது அதே பாதையில் தண்டியில் இருந்து அகமதாபாத் நோக்கி ஹர்தீக் படேல் யாத்திரை நடத்த போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பட்டீதார் அனாமத் அந்தோலன் சமிதி தலைமை குழுவின் உறுப்பினர் தினேஷ் படேல் கூறுகையில், காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட அதே பாதையில் சுமார் 350 கிமீ தூரம் நாங்களும் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த யாத்திரை தண்டியில் தொடங்கி அகமதாபாத்தில் முடியும். வருகிற 5 அல்லது 6ம் தேதி யாத்திரையை தொடங்க உள்ளோம். அதே போல் இரண்டாவது கட்டமாக ஹர்தீக் படேல் காந்திய வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். அதில் படேல் எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களுக்கு ரோஜாக்களை கொடுத்து அவர்களிடம் நட்பு ரீதியாக எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தை மிகவும் அமைதியான வழியில் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார். குஜராத்தில் உள்ள 182 எம்எல்ஏக்களில் 35 பேர் படேல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.