உலக கோப்பையை வென்று தந்தால் சல்மான் பட்டை பாக்., மன்னிக்கும் சோயப் அக்தர் பேட்டி
9/1/2025 2:20:21 PM
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்ெகட் அணி கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மூவருக்கும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டது. இவர்கள் மூவர் மீதான தடை இன்றுடன் முடிவடைகிறது. இதன் பின் மூவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் எனவும், இவர்கள் ஆறு மாத கால புனர்வாழ்வு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஆனால் மூவரையும் உடனடியாக அணியில் சேர்த்து கொள்ள முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. மேலும் ஐசிசி உத்தரவின்படி வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை மூவரும், ஊழல் தடுப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதில், அவர்களுக்கு ஊழல் தடுப்பு பற்றிய பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறுகையில், ‘‘மூவரும் தவறு செய்து விட்டனர். அதற்கான தண்டனையையும் அனுபவித்து விட்டனர். இதில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். தற்போது மூவரும் நல்ல மனிதர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை வென்று தருவதுதான், மூவருக்குமான உண்மையான மன்னிப்பு. மேலும் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினால், இந்தியாவில் இருந்து உலக கோப்பையை மீட்டு பாகிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும். அல்லது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி பாகிஸ்தானின் கௌரவத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். அப்போது பாகிஸ்தான் அவர்களை மன்னித்து விடும்,’’ என்றார்.