மணிப்பூரில் பதற்றம் அமைச்சர், 5 எம்எல்ஏ வீடு எரிப்பு வன்முறையில் 3 பேர் பலி
9/1/2025 2:01:28 PM
சுராசந்த்பூர்: மணிப்பூரில் சட்ட பேரவையில் இயற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஏராளமானோர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் 3 பொதுமக்கள் பலியாயினர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர், 5 எம்எல்ஏக்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத் தப்பட்டுள்ளது.மணிப்பூரில் முதல்வர் ஒக்ராம் சிங் இபோபி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் சட்டபேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவி–்த்து ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். இதில் சுராசந்த்பூர் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் காலவரையற்ற 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வன்முறை சம்பவங்களில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும் போராட்டக்காரர்கள் மணிப்பூர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் புங் சா தங் டோன்சிங் வீடு மற்றும் 5 எம்எல்ஏக்களின் வீடுகளையும் அடித்து உடைத்து சூறையாடி தீ வைத்து கொளுத்தினர். மேலும் போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் எம்எல்ஏ ஒருவரின் ஆதரவாளரை போராட்டக்காரர்கள் உயிருடன் கொளுத்தினர்.மணிப்பூர் மாநிலத்தில் நில சீர்திருத்தம், வெளியாட்கள் மணிப்பூரில் நுழைவதற்கு கட்டுப்பாடு உள்ளிட்ட 3 மாசோதாக்களை மாநில அரசு நேற்று சட்டபேரவையில் நிறைவேற்றியதுதான் வன்முறை சம்பவங்களுக்கு வித்திட்டுள்ளது. மேலும் இந்த மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களையும் குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக மணிப்பூரில் பதற்றம் நிலவி வருகிறது. சட்டபேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தகவல் பரவியதுமே நேற்று மாலை 6 மணிக்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.
ஆனால் இந்த சம்பவங்களில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாநில போலீசார் உறுதிப்படுத்தினர். அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறை சம்பவங்கள் காரணமாக சுராசந்த்பூரில் போலீசாரின் வாகனத்தையும் கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், மாநில அரசு தற்போது கொண்டு வந்துள்ள இந்த சட்டம் காரணமாக பழங்குடியினராகிய நாகாக்கள்,குக்கீக்கள் ஆகியோர் தங்களது நிலத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.