டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்
8/22/2015 11:53:54 AM
பொள்ளாச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கேரளாவுக்கு டேங்கர் லாரி மூலம் சுமார் 3 லட்சம் லிட்டர் பால் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து வாகனங்களில் பால் கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.டேங்கர் லாரி, டெம்போ, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பாலை, தரம் பார்த்து அனுப்பும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக கோவை மாவட்ட எல்லை பகுதியான பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சிபுரம் மற்றும் வாளையார் சோதனை சாவடிகளில், சிறப்பு பால் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு பாதுகாப்புதுறை மூலம் பாலின் தரத்தை ஆய்வு செய்து அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் மீனாட்சிபுரம் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். பாலை, தர பரிசோதனை செய்யும் பணி வரும் 28ம் தேதிவரை நடைபெறும் என்று கேரள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.