பழனி அருகே இரவில் காங். அலுவலகத்துக்கு தீ வைப்பு : அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
8/22/2015 11:51:39 AM
பழநி: பழநி அருகே காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகத்திற்கு தீ வைத்த அதிமுக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இளங்கோவனை கண்டித்து கடந்த 5 நாட்களாக உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பழநி அருகே சின்னகலையம்புத்தூரில் காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகம் உள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர், பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து திடீரென காங்கிரஸ் அலுவலகத்தின் கதவு, ஜன்னல் உள்ளிட்ட பகுதிகளில் ஊற்றி தீவைத்தனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் இருவரும் பைக்கில் தப்பியோடி விட்டனர். தகவலறிந்து காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதியில் திரண்டனர். பொதுமக்கள், கட்சியினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக பழநி தாலுகா போலீசில் காங். மேற்கு மாவட்ட துணைத்தலைவர் தாமோதரன் புகார் தெரிவித்தார். இன்று காலை கட்சி அலுவலகம் முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர் தீ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றம் நிலவுவதால் கட்சி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.போலீசாரின் விசாரணையில், தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய சின்ன கலையம்புத்தூரை சேர்ந்த அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் சதீஷ், அதிமுக பிரமுகர் ரமேஷ், ஒன்றிய மாணவரணி நிர்வாகி அழகேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் இருவரை தேடி வருகின்றனர்.இச்சம்பவத்தால் பழநி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.