மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு
8/22/2015 11:49:39 AM
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் திமுக மகளிர் அணி சார்பில் மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு இன்று நடக்கிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.திமுக மகளிர் அணி சார்பில் மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வாலாஜாபாத் சாலையில் உள்ள கரசங்காலில் இன்று மாலை 3 மணியளவில் நடக்கிறது. 100 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் மகளிர் அமரும் வகையில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு பந்தலில் பெண்கள் மட்டுமே அனுதிக்கப்பட உள்ளதால் கட்சியின் பிற நிர்வாகிகள் கட்சி தலைவர் பேசுவதை கேட்க ஆங்காங்கே பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் நுழைவு வாயில் தஞ்சாவூர் ஓலையில் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநாடு நடைபெறும் இடத்தை நேற்று ஆய்வு செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மதுவை எதிர்ப்பது மட்டுமின்றி திமுக ஆட்சியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இம்மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகிக்கிறார். மகளிர் அணி புரவலர் நூர்ஜகான் பேகம், துணை தலைவர் சங்கரி நாராயணன், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மகளிர் அணி தலைவர் டாக்டர் காஞ்சனா கமலநாதன் வரவேற்புரையாற்றுகிறார். மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இம்மாநாட்டில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் சற்குணபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், நாகர்கோயில் மகளிர் கிறிஸ்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சிந்தி கெயாள் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக மாலை 3 மணியளவில் சின்ன பொன்னுகுமார் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர் வருவதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரில் இருந்து மாநாடு நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறங்களிலும் வரவேற்பு பேனர்கள், திமுக கொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மலர்விழி தமிழ் அமுதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வனஜா தயாளன், காஞ்சிபுரம் ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜெ.கே.தினேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஏ.வி.எம்.நித்யா ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், மாவட்ட ஆதி திராவிட நல குழு உறுப்பினர் தி.க.பாஸ்கரன்,ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன்,வாலாஜா பாத் ஒன்றிய நத்தாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமலி சுதா முனுசாமி, வாலாஜா பாத் பேரூர் மாணவரணி அமைப்பாளர் மோகன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் வி.எஸ்.ராமகிருஷ்ணன், த.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, இளைஞரணி, விவசாய அணி, தொண்டர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து நிர்வாகிகளும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.