ஆவடி பகுதிகளில் 2,690 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்: 9 வியாபாரிகள் கைது
8/22/2015 11:43:51 AM
ஆவடி: ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,690 போதை பாக்கு மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை முதல் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
ஆவடி பகுதிகளான சி.டி.எச் சாலை, புதிய ராணுவ சாலை, காமராஜர் நகர் பிரதான சாலை மற்றும் பட்டாபிராம், தெற்கு பஜார், திருமுல்லைவாயல் ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் இருந்து ஹான்ஸ், பான்பராக், மாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் அடங்கிய 2,690 பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து போதை பாக்கு மற்றும் புகையிலை விற்பனை செய்த வியாபாரிகளான சர்மா நகரை சேர்ந்த வேலு (42), ஆவடியைச் சேர்ந்த பகத்சிங் (38), ஓசிஎப் குடியிருப்பைச் சேர்ந்த தர்மாசிங் (54), காமராஜர் நகரைச் சேர்ந்த அந்தோணி (26), பக்தவத்சலபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (45), சுந்தரம் தெருவைச் சேர்ந்த தயாளன் (60), பட்டாபிராமை சேர்ந்த கோவிந்தசாமி (49), காமராஜர்புரத்தை சேர்ந்த கருப்பசாமி (41), திருமுல்லைவாயலை சேர்ந்த கார்த்திக் (25) ஆகிய 9 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.