புனே திரைப்பட கல்லூரி விவகாரம்: மாணவர்களுடன் மத்திய குழு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
8/22/2015 11:41:37 AM
புனே: புனே திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.புனே திரைப்பட கல்லூரி தலைவராக கஜேந்திர சவுகான் என்ற சின்னதிரை நடிகரை மத்திய அரசு நியமித்தது. இதைக்கண்டித்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் உச்ச கட்டமாக மாணவர்கள் 5 பேரை இரு தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இதனால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக ராகுலும் களம் இறங்கினார். இந்நிலையில் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த பத்திரிகை பதிவாளர் எஸ்.எம்.கான் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் கான் கூறுகையில், மாணவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்னைகளை அரசு தரப்பு நன்றாக புரிந்து கொண்டுள்ளது. இது தொடர்பாக திங்கட் கிழமை மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.