திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி விழாவில் ஜீப் மோதி படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு: 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
8/21/2015 3:24:32 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரியில் ஜீப் ேமாதியதில் காயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவனந்தபுரம் காரியத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், நேற்று முன்தினம் மாலை ஓண விழா கொண்டாடப்பட்டது. பூக்கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது சில மாணவர்கள் கல்லூரிக்கு ஜீப்புகளை கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் சில மாணவர்கள் ஒரு ஜீப்பை கல்லூரி வளாகத்திற்குள் அதிவேகமாக ஓட்டி சென்றனர். அப்ேபாது கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த தன்ஷீபசீர்(20) என்ற மாணவி மீது ஜீப் மோதியது. இதில் மாணவி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் நடந்த உடன் மாணவர்கள் ஜீப்புடன் மாயமானார்கள். உடனடியாக தன்ஷீபசீர் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு தன்ஷீபசீர் உயிரிழந்தார்.இதற்கிடையே நேற்று காலை மாணவி மீது மோதிய ஜீப் கல்லூரி கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜீப்பை ஓட்டியது கண்ணூரை சேர்ந்த மாணவர் பைஜு என தெரிய வந்தது. இவர் நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் உட்பட 12 மாணவர்கள் ஜீப்பில் இருந்தது தெரிய வந்தது. இவர்கள் 12 பேர் மீதும் காரியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பைஜு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் தலைமறைவான மாணவர்களை தேடி வருகின்றனர்.