சோனியா, ராகுல் வழக்கில் மெத்தனம் எதிரொலி: அமலாக்கத்துறை இயக்குநர் டிஸ்மிஸ் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
8/20/2015 2:15:18 PM
புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த ராஜன் எஸ்.கடோச் அந்த பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமலாக்கப்பிரிவு மத்திய பிராந்தியத்தின் சிறப்பு இயக்குநராக இருந்த கர்னல் சிங் தற்ேபாது புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கனரக தொழில்துறை செயலாளராக இருந்த ராஜன் எஸ்.கடோச் அமலாக்கப்பிரிவு இயக்குநராக கடந்த ஆண்டு நியமிக்கப்படடார். தொழில்துறை செயலாளர் பதவியுடன் கூடுதலாக இந்த பணியை அவர் கவனித்து வந்தார். கடந்த மாதம் அவரது பதவியை மேலும் 3 மாதத்துக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் திடீரென அவர் நேற்று இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது இடத்தில் இதுவரை அமலாக்கப்பிரிவின் மத்திய பிராந்திய சிறப்பு இயக்குநராக இருந்த கர்னல்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்னல் சிங் அடுத்த 3 மாதத்துக்கு அமலாக்கப்பிரிவு இயக்குநராக செயல்படுவார் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.ராஜன் கடோச் கடந்த 6 மாதமாகவே அமலாக்கப்பிரிவு இயக்குநர் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் சோனியா மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு வந்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடந்த 1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த பத்திரிகைக்கு டெல்லியில் பிரதான இடத்தில் சொத்துக்கள் உள்ளன. இவற்றை யங் இந்தியன் என்ற அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. யங் இந்தியன் அறக்கட்டளையில் சோனியா மற்றும் ராகுல் உறுப்பினராக உள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்களை சோனியாவும், ராகுலும் சட்டவிரோதமாக மாற்றிக் கொண்டதாக பாஜ தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்கு சூடு பிடித்தது. சோனியாவுக்கும் ராகுலுக்கும் டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு டெல்லி ஐகோர்ட்டில் சோனியாவும், ராகுலும் தடை வாங்கினார்கள். இந்த தடை தற்போதுவரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பங்கு பரிமாற்றம் குறித்து வருமானவரி மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது. இந்நிலையில் தான் சோனியா மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கை முடித்துக் கொள்ள அமலாக்கப்பிரிவு முடிவு செய்தது. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குநர் கடோச், சோனியா மற்றும் ராகுல் மீது வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என வருவாய் ெசயலருக்கு கடிதம் எழுதினார். இந்த வழக்கை முடித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதற்கு பாஜ தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமலாக்கப்பிரிவு சரியாக விசாரணை நடத்தவில்லை என குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதமும் எழுதியிருந்தார். இந்த நிலையில் கடோச்சிடமிருந்து அமலாக்கப்பிரிவு இயக்குநர் பதவியை மத்திய அரசு பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.