அறவழி இயற்கை வழி
7/17/2015 2:11:30 PM
ஆறுகள் செல்லும் வழிகள் வேறு என்றாலும், கடலையே சென்றடைகின்றன. மதங்களின் மார்க்கங்கள் வேறாக இருந்தாலும், இறை நம்பிக்கையே மாறாதது. நல்லறம் பேணுதல், தீயன களைதல் ஆகிய நோக்கங்கள் இல்லாமல், இறைவழிப்பாதை சாத்தியமாகாது.புனித மாதம் ரமலான், நோன்பின் மகிமையை உணர்த்தி, இறை நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அறவழியின் மாண்பை உணரச் செய்கிறது. இஸ்லாமின் ஐம்பெரும் கடமைகளில், நிய்யத்(உறுதிமொழி), தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய நான்கு கடமைகள் ஒருசேர நிறைவேற்றப்படுகின்றன.பசித்திருத்தல் மூலம் விழித்திருத்தல் சாத்தியம். சகிப்புத்தன்மை உள்ளிட்ட நற்குணங்கள் மலர்கின்றன. ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் மாயமாகின்றன. நோன்புக்கஞ்சியை ஒருசேர அருந்தும்போது, ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாக உணர்கிறோம். ரம்ஜான் திருநாளின் உன்னதமும் அதுதான்.
ஆடி மாதம் துவங்கியிருக்கிறது. ஆன்மிகத் திருவிழாக்கள் களைகட்டுகின்றன. எளிமைதான் ஏற்றம் என்பது புரியாததால், எளியவை என்றால் பலர் ஏளனம் காட்டுகிறோம். அம்மன் ஆலயங்களில் வழங்கப்படும் கூழ், எளிய உணவு. வயிற்றுக்குக் குளிர்ச்சி. உடல்நலனுக்கு ஏற்றது. அருட்பிரசாதமாக அருந்தும்போது, பக்தர்கள் உள்ளத்தில் அளவிட முடியாத ஆனந்தம்.சக்தி மாதம் என்று ஆடி அழைக்கப்படுகிறது. சிவனும், சக்தியும் ஒன்று என்பர். சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதமாக ஆடி கருதப்படுவதற்குக் காரணம், பெண்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் நோக்கில்தான். வெளிப்பார்வைக்கு ஆண்கள் வலிமை படைத்தவர்களாகத் தோன்றினாலும், மனத்திட்பத்தில் பெண்களே வலிமையானவர்கள். மனமே மார்க்கம். நவீன காலத்தில் பெண்கள் பல துறைகளில் மேம்பட்டாலும், ஆண், பெண் சமத்துவம் இன்னும் மலரவில்லை என்பதே யதார்த்தம். அதேசமயம் தங்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் இருக்கின்றனர்.
ஆடித்திருநாள் கொண்டாட்டங்கள், இதன் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும்.முன்னோர்களை மறந்துவிட்டோம். இயற்கையைச் சீர்குலைக்காத வணக்கத்துக்குரியவர்கள் அவர்கள். ஆனால், இன்று இயற்கை மீதுதான் எதற்கெடுத்தாலும் கைவைக்கிறோம். இயற்கை தனது வேகத்தைக் காட்டினால், மனிதர்கள் வாழ்வதற்கு வழி இருக்காது. நதிகளின் புனிதத்தைக் காக்கத் தவறிவிட்டோம். வற்றாத நதிகள் கூட வற்றிப்போனதற்கு மனிதர்களின் இயற்கைச் சூறையாடல் அன்றி வேறு எந்தக் காரணமும் இல்லை. ஆடி பதினெட்டு தினத்தில் நதிகளில் புனித நீராடுவதில் தாத்பர்யங்கள் உண்டு. நதிகளை அன்னையாகப் பாவிப்பதன் உட்கருத்தும் இதுதான்.மதங்களை நேசிக்கும் மனிதர்கள் அறவழிக்கு மாறாக நடக்க மாட்டார்கள். அது இயற்கை மாறா வழி. ஆனால், மதம் பிடித்த மனிதர்களால்தான் இயற்கையும், அறவழியும் சீர்குலைகிறது. இதைத் தடுப்பதும், தவிர்ப்பதும் மனித மனங்களால் இயலக்கூடியதே!